×

நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் மோடி தாக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் பெலகாவியில் பாஜ வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்களின் சொத்துகளை அதிகரிப்பதற்காக பாஜ உழைத்துவருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இளவரசன் ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டையே எக்ஸ்ரே செய்யவுள்ளதாக கூறுகின்றனர்.அவர்கள் மக்கள் சொத்துகள், வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள், பெண்களின் தங்க நகைகள் ஆகியவற்றை எக்ஸ்ரே செய்வார்கள். உங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் சோதனை செய்து உங்கள் சொத்துகளை கைப்பற்றி, அவற்றை காங்கிரஸ் கட்சி அவர்களது வாக்கு வங்கியாக இருப்பவர்களுக்கு பிரித்து கொடுக்கும். இந்த மாபெரும் கொள்ளையை காங்கிரஸ் அரங்கேற்ற நீங்கள் அனுமதிப்பீர்களா?

மோடி இருக்கும் வரை இதுபோன்ற எண்ணங்களை காங்கிரஸ் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன். நான் இருக்கும் வரை இதையெல்லாம் நடத்த விடமாட்டேன். காங்கிரஸ் இளவரசனின் சமீபத்திய பேச்சை கேட்டிருப்பீர்கள். நாட்டின் மன்னர்கள் மற்றும் ராஜாக்கள் ஒடுக்குமுறையை கையாண்டதாக கூறியிருக்கிறார். ஏழை மக்களின் சொத்துகளை மன்னர்களும், ராஜாக்களும் அபகரித்ததாக கூறி, சத்ரபதி சிவாஜி, கித்தூர் ராணி சென்னம்மா போன்ற தலைசிறந்தவர்களை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார். அவர்களது ஆட்சிமுறையும், நிர்வாக முறையும் தான் இன்றைக்கு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அப்பேர்ப்பட்ட தலைசிறந்த நபர்களை அவமதித்திருக்கிறார்.

மைசூரு மன்னர் குடும்பம் இன்றளவும் நாடு முழுக்க மதிக்கப்படுகிறார்கள். வாக்கு அரசியலை கருத்தில்கொண்டு ராகுல் காந்தி உள்நோக்கத்துடன் பேசிவருகிறார். இந்து மன்னர்களை அவமதிக்கும் வகையில் பேசும் ராகுல் காந்தி, நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. அவுரங்கசிப் 4 கோவில்களை இடித்தார். ஆனால் அவுரங்கசிப்பை பெருமையாக பேசும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி. இந்து கோவில்களை இடித்தவர்களை எல்லாம் காங்கிரஸ் நினைவில் வைத்துக்கொள்ளாது. பசுக்களை கொன்ற மற்றும் நாட்டின் பிரிவினைக்கு காரணமான நவாப்களை எல்லாம் காங்கிரஸ் நினைவுகூட படுத்தாது. அம்பேத்கரின் திறமையை அடையாளம் கண்டவர் பரோடா மகாராஜா. காங்கிரஸ் இளவரசருக்கு இந்து அரசர்களின் பங்களிப்பு நினைவில் இருக்காது. ஓட்டுக்காக இந்து அரசர்கள், மன்னர்களுக்கு எதிராக பேசும் ராகுல் காந்திக்கு நவாப்கள், சுல்தான்களுக்கு எதிராக பேசாதது ஏன்? என்றார்.

The post நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Nawabs ,Nizams ,Modi ,Bengaluru ,Baja ,Belagavi, Karnataka ,Bajaj ,Congress ,prince ,Rahul Gandhi ,Priyanka Gandhi ,Nijams ,Dinakaran ,
× RELATED என்னுடைய மகனையே உங்களிடம்...